டெல்லி: இந்தியாவில் தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; இன்று பிரதமரை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் உடல்நலம் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தேன். இந்தியாவில் தெருநாய்கள் எண்ணிக்கை 6.2 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
உலகில் நிகழும் ஒட்டுமொத்த ரேபிஸ் மரணங்களில் இந்தியாவில் 36% பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் தெருநாய் பிரச்னையை எதிர்கொள்ள தேசிய நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும். தெருநாய் கடி சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும். ஆங்காங்கே தெருநாய் கூடாரங்கள் அமைக்கப்பட வேண்டும். விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், செயல்படுத்தல் பயனற்றதாக உள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்தேன். உள்ளூர் அமைப்புகளுக்கு இந்த சிக்கலை திறம்பட கையாள போதுமான நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை. அவசர நடவடிக்கை தேவை என்பதால் அவர்களுக்கு தீர்வை வழங்கும் விதமாக ஒரு குழுவை நிறுவ பரிந்துரைத்தேன் என்று கூறினார்.
The post தெருநாய் கடி சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.கோரிக்கை appeared first on Dinakaran.