தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 5% குறையும் அபாயம் தொகுதி மறுவரையறையை எதிர்த்து தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

திருமலை: தெலங்கானா மாநிலம் சட்டப்பேரவையில் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் செய்யும் திட்டத்திற்கு எதிராக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கொண்டு வந்த தீர்மானம் மீது நேற்று விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு மறுபகிர்வு செய்தால், அது தென் மாநிலங்களுக்கு தீங்கு விளைவிக்கும். தென் மாநிலங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டால் அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக அமல்படுத்தியுள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுபகிர்வு செய்யப்பட்டால் தென் மாநிலங்களுக்கு இழப்பு நேரிடும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறையும் அபாயம் உள்ளது. தென் மாநிலங்களைக் கட்டுப்படுத்த தொகுதி மறுபகிர்வை மத்திய அரசு பயன்படுத்துகிறது.

இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக நின்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  அரசியலுக்கு அப்பால் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் போராட்டப் பாதையில் இறங்குவோம். இதற்காக துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா, ஜனா ரெட்டி தலைமையில் விரைவில் அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 5% குறையும் அபாயம் தொகுதி மறுவரையறையை எதிர்த்து தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: