தாம்பரம், மார்ச் 28: தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் பணிமனையில் இருந்து கார்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் எல்எம்ஜி வகை சரக்கு ரயில் பராமரிப்பு பணிகள் முடிந்து அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் நோக்கிச் சென்றது. தாம்பரம் – சானிடோரியம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் இன்ஜின் டிரைவர்கள் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணிக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ரயில்வே மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய சரக்கு ரயில் பெட்டிகளை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடந்த நிலையில் தடம் புரண்ட 3 சரக்கு பெட்டிகளும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டு, சரக்கு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதை வேடிக்கை பார்க்க சானிடோரியம் மேம்பாலத்தின் மேல் வாகன ஓட்டிகள் கூட்டம் கூட்டமாக நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தியாகும் கார்கள் லாரிகள் மூலமாக அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே மேல்பாக்கம் யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்படும்.
அங்கிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு ரயில் மூலமாக கார்கள் கொண்டு செல்லப்படும். அதன்படி, நேற்று வழக்கம்போல் சென்ற சரக்கு ரயில் திடீரென்று தடம் புரண்டது. ரயில்வே பணிமனைக்கு அருகே தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கியதாக தெரிவித்தனர். கார்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் திடீரென்று தடம் புரண்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.