பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஆனைமலை மற்றும் கோட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 107 விவசாயிகள் சுமார் 615 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை தரம் பிரித்து, கண்காணிப்பாளர் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.
இதில் முதல் தரம் 284 மூட்டை கொப்பரை ரூ.170.10 முதல் ரூ.182.65 வரையிலும். 331 மூட்டை 2ம் தர கொப்பரை ரூ.125.20 முதல் ரூ.154 வரை என 276 குவிண்டால் கொப்பரை மொத்தம் ரூ.43.17 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை 7 வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், ‘ஆனைமலை விற்பனை கூடத்தில், கடந்த ஆண்டு வரை ஒருகிலோ கொப்பரை அதிக பட்சமாக ரூ.115க்கே ஏலம் போனது. ஆனால், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து ஒரு கிலோ கொப்பரை ரூ.125ஐம் தாண்டியது. தற்போது ஒருகிலோ அதிக பட்சமாக ரூ.182 வரை ஏலம்போனது.
தற்போது வெயிலின் தாக்கத்தால் கொப்பரை உலர வைக்கும் பணியும், உற்பத்தியும் அதிகமாக உள்ளது. மேலும், தேங்காய் விலை உயர்வால், கொப்பரையின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை எதிர்பார்த்ததை விட கூடுதல் விலைக்கு ஏலம் போவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.43.17 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.