பீகார் மேலவையில் மோதல் லாலுவின் மனைவி என்பதை தவிர வேறெந்த தகுதியும் இல்லை: ரப்ரி தேவியை அவமதித்த நிதிஷ் குமார்

பாட்னா: பீகார் மேலவையில், “லாலு பிரசாத் யாதவின் மனைவி என்பதை தவிர உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை” என ரப்ரி தேவியை நிதிஷ் குமார் கூறியதால் மீண்டும் மோதல் வெடித்தது. பீகார் சட்டமேலவைக்கு நேற்று வந்த ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர்கள், தங்கள் கட்சி கொடியின் பச்சை நிறத்தில் பட்டைகளை அணிந்து வந்திருந்தனர். அந்த பட்டைகளில், “பீகாரில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த இடஒதுக்கீடு திருடப்பட்டது” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை பார்த்து ஆத்திரமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், “அந்த சட்டம் என் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் பெருமையை ஆர்ஜேடி திருடி கொண்டது” என காட்டமாக விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ராப்ரி தேவி எழுந்தபோது, “இந்த விவகாரத்தில் நீங்கள் விலகி இருங்கள். லாலு பிரசாத் யாதவின் மனைவி என்பதை தவிர உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும் உங்களுடையது இல்லை. அது உங்கள் கணவருடையது” என கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ஜேடி உறுப்பினர்கள், நிதிஷ் குமார் ஆளும் தகுதியை இழந்து விட்டார்” என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.

The post பீகார் மேலவையில் மோதல் லாலுவின் மனைவி என்பதை தவிர வேறெந்த தகுதியும் இல்லை: ரப்ரி தேவியை அவமதித்த நிதிஷ் குமார் appeared first on Dinakaran.

Related Stories: