நிறைய தொழிற்சாலைகளை கொண்டுவந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுவை சட்டசபையில் பாராட்டு: பாஜ எம்எல்ஏவின் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி புகழாரம்

புதுச்சேரி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று பல தொழில்முனைவோரை சந்தித்து, தொழிற்சாலை துவங்க அழைப்பு விடுத்தார். இதன் காரணமாக நமது மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் நிறைய தொழிற்சாலைகள் வந்துள்ளது என்று புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் அசோக்பாபு (பாஜ) எம்எல்ஏ பேசுகையில், ‘புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக தொழில் துவங்குவதற்கு ஏதுவாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் திட்டம் உள்ளதா?.

கரசூரில் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதா?’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: முதலீட்டாளர் மாநாடு நடத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. கரசூரில் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. ஜூலை மாதம் அந்த இடம் பிரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்கப்படும். ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி பெறுவதற்கு எவ்வளவு கடினமாக உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.

ஒற்றை சாளர முறையில் அனுமதி தரப்படும், மூன்று மாதங்களுக்குள்ளாக தொழிற்சாலை துவங்க அனுமதி தேவையில்லை என தெரிவித்தோம். ஆனால் அதன்பிறகு எந்த தொழிற்சாலையும் பெரிதாக வரவில்லை. அண்டை மாநிலமான தமிழகத்தில் நிறைய சலுகை கொடுக்கிறார்கள். ஏனெனில் இந்த முடிவை அவர்களால் சுயமாக எடுக்க முடிகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று பல தொழில் முனைவோரை சந்தித்து, தொழிற்சாலை துவங்க அழைப்பு விடுத்தார்.

இதன்காரணமாக திண்டிவனத்தில் பார்மா பார்க், சிப்காட் தொழிற்பூங்கா கொண்டு வந்து நிறைய தொழிற்சாலைகள் வருகிறது. நமது எல்லையில் உள்ள வானூர், இரும்பை உள்ளிட்ட இடங்களில் கூட பல தொழிற்சாலைகள் வருவதை பார்க்க முடிகிறது (அப்போது திமுக எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்). ஆனால் நமது மாநிலத்தில் தொழிற்சாலைக்கு சலுகைகள், அனுமதி கொடுக்க ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டிய நிலைமை. மின்சார கட்டண சலுகை, வரி விலக்கு கூட நம்மால் முடிவு எடுக்க முடியாது.

ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு மின்சார இணைப்பை கூட விரைந்து கொடுக்க முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.  தொழிற்சாலை அனுமதி தொடர்பாக தலைமை செயலர்தான் முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காகத்தான் மாநில அந்தஸ்து தேவை என்று சொல்கிறோம். மாநில அந்தஸ்து பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதுச்சேரி வளர்ச்சிபெறாது, பின் தங்கியே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நிறைய தொழிற்சாலைகளை கொண்டுவந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புதுவை சட்டசபையில் பாராட்டு: பாஜ எம்எல்ஏவின் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: