புதுச்சேரி, மார்ச் 26: புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகரை ஒருமையில் விமர்சனம் ெசய்ததாக சுயேட்சை எம்எல்ஏ நேரு சபை காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட நிலையில் முதல்வர் தலையிட்டு சமரசம் செய்ததன்பேரில் 15 நிமிடங்களுக்குபின் மீண்டும் சபை நிகழ்வுகளில் பங்கேற்றார். புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் சுயேட்சை எம்எல்ஏ நேரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுதிமொழிக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து நேரு எம்எல்ஏ அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இது நேருவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கடந்த பிப்ரவரி மாதம் கூடுதல் செலவினங்கள் அனுமதிக்காக ஒரு நாள் கூட்டப்பட்ட சட்டசபை கூட்டத்தில் உறுதிமொழி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து, சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் நேரு ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, நேருவை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மானியக் கோரிக்கைகள் மீது பேசிய நேரு, ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக பேசிக் கொண்டிருந்தார், அப்போது சபாநாயகர் தலையிட்டு, ஒரு எம்எல்ஏ இவ்வளவு நேரம் பேசினால், மற்றவர்களுக்கு எப்போது வாய்ப்பளிப்பது எனக்கூறி மேலும் பேச அனுமதி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நேரு, தன் கையில் பேச வைத்திருந்த குறிப்பை கிழித்தெறிந்தார்.
இந்நிலையில் சபாநாயகர் பல்வேறு சட்டமன்ற குழுக்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு ஆண்டு காலம் நீட்டித்து சட்டசபையில் அனுமதி வழங்கினார். அப்போது குறுக்கிட்ட நேரு எம்எல்ஏ உறுதிமொழி குழு தலைவர் யார், உறுப்பினர்கள் யார்? என சபாநாயகரை பார்த்து கேட்டார். ஏற்கனவே உறுதிமொழி குழு தலைவர் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி என்பதை தெரிவித்து விட்டேன். இதற்கு மேலும் என்ன சந்தேகம், என சபாநாயகர் செல்வம் பதிலளித்தார். உடனே நேரு, சபாநாயகர் தான் தோன்றித்தனமாக பேசுகிறார். சபாநாயகராக இருக்க தகுதியில்லை. நீங்கள் ஒரு அவமான சின்னம் எனக்கூறி, சபாநாயகரை ஒருமையில் பேசினார்.
இதன்பின் பேசிய சபாநாயகர் செல்வம், ஒருமையில் பேசிய நேருவை, சபை காவலர்கள் அவையில் இருந்து வெளியேற்றவும், வெளியேற மறுத்தால் குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றவும் உத்தரவிட்டார். உடனே சபைக் காவலர்கள் நேருவை வலுக்கட்டாயமாக அவையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இசம்பவத்தால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒருமையில் பேசிய நேருவை இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார், தனது துறை மீதான மானிய கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி எழுந்து, எம்எல்ஏ நேரு அவசரத்தில் என்ன பேசுவது என தெரியாமல் ஒருமையில் பேசிவிட்டார். மேலும் நேரு உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடியவர். அவையில் என்ன பேசியிருந்தாலும், அதையெல்லாம் மன்னித்து அவரை மீண்டும் அவைக்கு அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து சபாநாயகர் ஒரு எம்எல்ஏ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விதியுள்ளது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஒருமையில் பேசியதை முதல்வர் மன்னித்து ஏற்றுக் கொண்டதால், நேருவை அவைக்கு அழைக்கிறேன் என்றார். 15 நிமிடங்கள் வெளியேற்றப்பட்டிருந்த நேரு, அதன்பிறகு அவை நிகழ்வுகளில் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post சட்டசபையில் சபாநாயகரை ஒருமையில் விமர்சனம் சுயேட்சை எம்எல்ஏ குண்டுக் கட்டாக வெளியேற்றம் முதல்வர் சமரசத்துக்குபின் பங்கேற்றார் appeared first on Dinakaran.
