தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்கப்படுமா? பேரவையில் அமைச்சர் பொன்முடி பதில்

தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் (காங்கிரஸ்) பேசுகையில் “நாங்குநேரியில் பனைப் பொருள் அங்காடி அமைக்கப்படுமா” என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில் “நாங்குநேரி அருகே வள்ளியூர், திருச்செந்தூர் உட்பட 4 இடங்களில் பனை பொருள் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே நாங்குநேரியில் தனியாக பனை பொருள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டிய தேவை தற்போது எழவில்லை. எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலனை செய்யப்படும்” என்றார்.
ரூபி.மனோகரன்: நியாய விலைக்கடையில் கருப்பட்டிக் கட்டிகளை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் வழங்க வேண்டும். பனை தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும். கள் விற்பனைக்கு அருகில் உள்ள கேரளா கர்நாடகா ஆந்திர மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்க வேண்டும். கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல கள், பதநீர் விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி: கள்ளில் சிலவற்றை கலந்தால் அது போதைப் பொருள். அதுபோன்ற நிலை வந்து விடக் கூடாது. கலக்க வேண்டியதை கலந்தால் மட்டுமே கள் ஆகும். பதநீரை கள் ஆக்குவது சரி, ஆனால் அப்போதே
அதை போதைப்பொருள் ஆக்கினர். நானே பனை, தென்னை மரங்கள் வைத்துள்ளேன். பதநீர், கள்ளாக அனுமதிப்பது குறித்து பரிசீலித்து முதல்வர் வரும் காலத்தில் நடவடிக்கை எடுப்பார். பனை பொருள்கள் இணையதளம், கைபேசி வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. பனை ஓலை விசிறி, பாய், கைவினைப் பொருள்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிவகாசி எம்எல்ஏ அசோகன்: பதநீர், கள் மீதான வழக்குகளை கள்ளச்சாராயம் காய்ச்சியது போன்ற வழக்குகளாக பதியக்கூடாது. அதற்கு தனியாக வழக்கு பதிய வேண்டும்.
அமைச்சர் பொன்முடி: கைது செய்யப்படுபவர்கள் தொடர்பாக முதல்வரிடம் பேசி உரிய முடிவு செய்யப்படும்.

* மனவருத்தத்தில் இருந்தேன் எனக்கு மருந்திடும் வகையில் முதல்வர் என்னை அழைத்து பேசினார்: வேல்முருகன் எம்எல்ஏ பேட்டி
சட்டப்பேரவை வளாகத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ‌. அளித்த பேட்டி: சில தினங்களுக்கு முன்பு முதல்வர் என்னை கடுமையாக பேசியதால் நான் மன வருத்தத்தில் இருந்தேன். அதற்கு மருந்திடும் வகையில் நேற்று அவரது அறையில் என்னை அழைத்து எனக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை பேசினார். நீர்வளத்துறை அமைச்சர் மூலமாக உன்னுடைய தொகுதிக்கு சில திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் எனக்கு தெரிவித்தார். நான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போது, முதல்வரின் கருத்தை மட்டும்தான் ஏற்றுக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

* அதிமுக ஆட்சியில்தான் 100, 200% சொத்துவரி உயர்த்தப்பட்டது
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: சொத்துவரியை திமுக ஆட்சியில் உயர்த்தியதால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் கே.என்நேரு: சொத்துவரியை 2018ம் ஆண்டு நீங்கள் தான் 100, 200 சதவீதம் என்று உயர்த்தினீர்கள். அதன்பிறகு தேர்தல் வருகிறது என்பதற்காக நிறுத்தி விட்டீர்கள். சொத்துவரி உயர்வுக்கு என்ன காரணம் என்றால் மத்திய அரசு 15வது நிதிக்குழுவில் இருந்து இட மதிப்பை மதிப்பீட்டு சொத்துவரியை விதித்ததால்தான், உங்களுக்கு பணம் வரும் என்று கூறியது. ஆனால் அவர்கள் தரவில்லை. சென்னை மாநகராட்சியில் 18 ஆண்டுகள் சொத்துவரியை உயர்த்தவில்லை. எங்கள் ஆட்சியில் சொத்துவரியை பெரிய அளவில் உயர்த்தவில்லை. 600 சதுர அடிக்கு குறைவாக இருக்கிறவர்களுக்கு இதுவரை எந்த சொத்துவரியும் உயர்த்தாமல்
இருக்கிறோம்.
எஸ்.பி.வேலுமணி: சொத்துவரியை பொறுத்தவரையில் அதிகாரிகள் சொன்ன பிறகு தான் நாங்கள் உயர்த்தினோம். கொரோனா காலம் இருந்தது. எனவே நாங்கள் நிறுத்தி வைத்தோம். ஒன்றிய அரசு சொல்வதை எதையும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள். சொத்து வரி விஷயத்தில் எப்படி ஏற்றீர்கள்.
கே.என்.நேரு: கொரோனா அல்ல, தேர்தலுக்காக நிறுத்தி வைத்தீர்கள். அவர்கள் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம், அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்கப்படுமா? பேரவையில் அமைச்சர் பொன்முடி பதில் appeared first on Dinakaran.

Related Stories: