தமிழக மீனவர் நலனில் ஒரு சதவீதம் கூட ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை: சீமான் சாடல்

ராமேஸ்வரம்: ஒரு சதவீதம் கூட மீனவர் நலனில், ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை என சீமான் ெதரிவித்தார். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக மீனவர்களின் நலனுக்காக ஒரு சதவீதம் கூட அக்கறை இல்லாமல் ஒன்றிய அரசு தொடர்ந்து இயங்கி வருகிறது.

ஒரு சிறிய நாடு மிகப்பெரிய துணை கண்டத்தில் இருக்கக் கூடிய மீனவர்களின் படகுகளை சிறை பிடித்து ஏலம் விடுகிறது. இதனை ஒன்றிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மக்களின் வரியை வாரி சுருட்டி கொள்ளும் நீங்கள், மக்களின் வாழ்க்கை பற்றி ஒரு துளிகூட சிந்திப்பதில்லை. இதுவரை 800க்கும் குறைவில்லாத மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதனை வேடிக்கை பார்க்கக் கூடிய அரசு அதிகாரத்தை எப்படி பார்ப்பது? குஜராத் வீரர்களுக்கு கொடுக்கின்ற பாதுகாப்பை தமிழக மீனவர்களுக்கு ஏன் கொடுப்பதில்லை? தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும்போது நமது ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளதா?.

தமிழர்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஒன்றிய அரசு ஏற்குதா, இல்லையா? மீனவர்கள் எல்லை தாண்டி வருகிறார்கள் என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடல் எல்லைப் பகுதியில் கேரள மீனவர்கள் எல்லை தாண்டி வருகிறார்கள். அவர்களை இலங்கை கடற்படை பிடிக்கிறதா? தமிழக மீனவர்களை மட்டும் பிடிக்கிறது. அவன் தமிழன் என்பதால் பிடிக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழக மீனவர் நலனில் ஒரு சதவீதம் கூட ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை: சீமான் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: