நாடே வியக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. உலக நாடுகள் பின்பற்றும் “காலை உணவு திட்டம்” : அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய பதிலுரையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் தமிழ்நாடு அரசு செயல்படுத்தத் தொடங்கியது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் ஒன்றிய அரசு நிதி வழங்கியது. ரயில்வே திட்டங்களுக்காக ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை, உத்தரப் பிரதேசத்துக்கு ஒரே ஆண்டில் வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது.

உலகில் உள்ள பல நாடுகள் செமிகண்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காகக் கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என நம்புகிறேன். இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலம் தமிழ்நாடு.10649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. திமுக ஆட்சியில் புத் தொழில் நிறுவனங்களில் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சிப்காட் மூலம் 9 தொழில் பூங்காதான் அமைக்கப்பட்டது.திமுக ஆட்சியில் 32 தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது.28 தொழிற்பேட்டைகள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.பல மாவட்டங்களில் டைடல், மினிடைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. வேலூர், சேலம், தஞ்சை, ஒசூர் போன்ற பல நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் பசியில் அழவே கூடாது என்று முதல்வர் காலை உணவுத் திட்டத்தை வழங்கியுள்ளார். பசிப்பிணி நீக்கிய | மருத்துவராக முதலமைச்சர் திகழ்கிறார்.”காலை உணவுத் திட்டம்” உள்ளிட்ட திராவிட மாடல் அரசின் திட்டங்களை இன்று உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை நாடே வியந்து பார்க்கிறது. மாதம் ரூ.1000 வரும்போது பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக அமைகிறது என்று லண்டன் பேராசிரியர்கள் ஆய்வில் தெரிவிக்கிறது. மராட்டியத்தில் இதேபோன்று ஒரு திட்டத்தை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் கொண்டு வந்தனர். மராட்டியத்தில் தேர்தல் முடிந்த பிறகு 15 லட்சம் பயனாளிகளை திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளனர். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் கூட நாம் வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்.

தோழி விடுதிகள் திட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நவீன குலக்கல்வி திட்டத்தை ஒன்றிய அரசு நம்மிடம் திணித்து வருகிறது. தமிழ்நாடு எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்தை முன்வைத்து வெற்றிப்பாதையில் செல்கிறது. தமிழ் மொழியை பாதுகாத்து வளர்த்திட மிக மிக குறைவான நிதியைத்தான் ஒன்றிய அரசு ஒதுக்கியது. இந்தி, வடமொழிகளை வளர்க்க ஒன்றிய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஜாதி பாகுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிமுகத்திய விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கிறது. இதற்கு மாறாக உருவாக்கப்பட்டதுதான் கலைஞர் கைவினைத் திட்டம். இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.7185 கோடி ஆக்கிரமிப்பில் இருந்த அறநிலையத்துறை நிலங்கள் மீட்கப்பட்டன.

5 ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகளை கட்டிய நீங்கள் எங்கே, ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகளை கட்டும் நாங்கள் எங்கே. 38,000 கோடியில் குடிநீர் திட்டத்தின் மூலம் 3 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். 2011 முதல் 2021 வரை ஆண்டுக்கு சராசரியாக 2077 கோடி ரூபாயை அதிமுக ஆட்சி விளையாட்டு துறைக்கு ஒதுக்கியது. அதிமுக ஆட்சியில் 3 விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைக்கு ரூ.1933 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது திமுக அரசு. 93 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளோம். மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும். ஒரு மடிக்கணினி மதிப்பு ரூ.20,000 என்ற அளவில் வாங்கப்படும். மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி என எதையும் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறது ஒன்றியஅரசு. 2000 கோடி ரூபாய் அல்ல 10000 கோடி கொடுத்தாலும் கொள்கையை இழக்க மாட்டோம் என்று முதல்வர் பிரகடனம் எடுத்துள்ளார். வடக்கே இருந்து வரும் ஆதிக்கத்துக்கு எந்த காலத்திலும் தமிழ்நாடு தலைவணங்கியதில்லை. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சி சக்கரம் தமிழ்நாட்டில் சுழலவில்லை. கனிஷ்கர் ஆட்சி என்பது தெற்கே வந்ததில்லை; அவுரங்கசீப்பினாலேயே தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை. “இவ்வாறு தெரிவித்தார்.

The post நாடே வியக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. உலக நாடுகள் பின்பற்றும் “காலை உணவு திட்டம்” : அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை!! appeared first on Dinakaran.

Related Stories: