பெண்கள் ஆபாச படம் பார்ப்பது சுய இன்பம் செய்வது குற்றமாகாது: விவாகரத்துக்கு காரணங்களாக ஏற்க முடியாது, ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, விவாகரத்து கேட்ட கணவரின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது. கரூரை சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி அந்த நபர், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் 2018ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இருவரும் தங்களது முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்றவர்கள். தற்போது 2வது திருமணத்தில் இருந்தும் வெளியேறும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 2020 டிசம்பரில் இருந்தே இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது. அவர், ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்.

மாமனார், மாமியார் தன்னை மதிப்பதில்லை. மனைவி அதிகமாக செலவிடுகிறார். அதிக நேரம் போனில் செலவிடுகிறார். வீட்டு வேலைகளை செய்வதில்லை போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மனுதாரர் விவாகரத்து கேட்டுள்ளார். மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆனால், மனுதாரருக்கு அவ்வாறு எதுவும் இல்லை. மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக் கூடியதே. மனைவி ஆபாசப் படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். தடை செய்யப்பட்ட வகையை தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது. ஆபாச படங்களுக்கு அடிமையாவது தவறு. மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்பது மனுதாரரின் மற்றொரு குற்றச்சாட்டு.

ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது. ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. சுய இன்பம் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இதனால் மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது. தனியுரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. இது திருமண உறவுகளில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார். அப்போது அவரது தனியுரிமையை கைகொள்கிறார். மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளது. ஒரு பெண் மனைவியாகி விட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமையை மறுக்க முடியாது. மனைவி மீது மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவை உண்மையாக இருந்தாலும், அந்த குற்றச்சாட்டுகள் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. எனவே, இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

The post பெண்கள் ஆபாச படம் பார்ப்பது சுய இன்பம் செய்வது குற்றமாகாது: விவாகரத்துக்கு காரணங்களாக ஏற்க முடியாது, ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: