ரூ.24 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் ஐடி துறை இந்தியாவுக்கு தனி பிரவுசர் உருவாக்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்காக தனியாக பயனாளர்கள் தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிபிரவுசர் உருவாக்க போட்டி அறிவிக்கப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும் போது கூறியதாவது: மென்பொருள் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவை தயாரிப்பு சார்ந்த நாடாக முன்னேற்றுவதே குறிக்கோள். உள்நாட்டு பிரவுசரை உருவாக்க இதற்காக நடந்த போட்டியில் கல்வியாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். பிரவுசர் உருவாக்குவது மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்கும் முதல்படி ஆகும்.

தனி பிரவுசர் உருவாக்கும் போது நமது நாட்டின் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என்பதால் பயனர்களின் தகவல்கள், பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் நமது மக்களின் தகவல்கள் நமது நாட்டிலேயே இருக்கும். புதிய பிரவுசர் ஐஓஎஸ், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுடன் செயல்படும். இந்தியாவின் கவனத்தை சேவையில் இருந்து தயாரிப்புகளுக்கு விரிவுபடுத்துவதில் இது ஒரு பெரிய முயற்சி. ஏனெனில் ரூ.24 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கவனம் இதுவரை சேவைகளில் இருந்தது. இப்போது, ​​​​இந்திய அரசு ஸ்டார்ட்-அப்கள், கல்வி நிறுவனங்களை மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. இந்தியாவை ஒரு தயாரிப்பு நாடாக உருவாக்குவதே குறிக்கோள். இது மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தியை உள்ளடக்கியதாக இருக்கும். இவ்வாறு பேசினார்.

The post ரூ.24 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் ஐடி துறை இந்தியாவுக்கு தனி பிரவுசர் உருவாக்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: