போர் நிறுத்த முயற்சி சரியான பாதையில் செல்கிறது: ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தைக்கு பின் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். போர் நிறுத்த முயற்சி சரியான முறையில் செல்வதாக டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான முயற்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக இரு நாட்டு அதிபர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்.

போரை நிறுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. இதன்படி, 30 நாட்களுக்கு போரை நிறுத்தும் திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஜெலன்ஸ்கியும் ஒப்பு கொண்டார். ஆனால் புடின் ஏற்கவில்லை.நேற்று முன்தினம், டிரம்ப் மற்றும் புடின் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, டிரம்பின் திட்டத்தை பகுதியாக ஏற்பதாகவும், 30 நாட்களுக்கு உக்ரைனின் அணுசக்தி மற்றும் மின்சார அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த தயாராக இருப்பதாகவும் புடின் கூறினார்.

இந்த உறுதிமொழியை ரஷ்யா மீறியுள்ளதாக ஜெலன்ஸ்கி நேற்று குற்றம்சாட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘தனது நாட்டின் அணு அமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது’ என்றார். அதே நேரத்தில், தங்களுடைய பெட்ரோலிய குழாய்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறியுள்ளது.

இந்த சூழ்நிலையில், டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி, தொலைபேசி வாயிலாக நேற்று பேசினர். இதை தொடர்ந்து டிரம்ப் கூறுகையில், ‘இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. புடினுடன் நடந்த பேச்சின் விவரங்கள் தொடர்பாக, ஜெலன்ஸ்கியிடம் விளக்கினேன். போர் நிறுத்த முயற்சிகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இரு தரப்புடன் தொடர்ந்து பேசப்படும்’ என்றார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்புதல்: வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் நிருபர்களிடம் கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் உக்ரைன் போரில் அமைதி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தேவை பற்றி பேசினர். அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான தேவை பற்றியும் வலியுறுத்தினர். இதேபோன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தேவைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் பேசினார் என லெவிட் கூறியுள்ளார். போரில் செலவிட்ட தொகையை மக்களின் தேவைக்கு சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்றார். எரிசக்தி உட்கட்டமைப்புகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்படும் என கூறி, அதற்கான உத்தரவை புதின் பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இரவில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன. எனினும், ஒரு விரிவான போர்நிறுத்த ஒப்பந்தம் அவசியம் என அமெரிக்கா கூறியதும், இந்த தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தியது என சி.என்.என். வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

The post போர் நிறுத்த முயற்சி சரியான பாதையில் செல்கிறது: ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தைக்கு பின் டிரம்ப் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: