சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை போலீசார் கலைத்த போது வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருவல்லிக்கேணி ரோட்டரி நகரைச் சேர்ந்த விமலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை தாக்கியதில் தனது மகன் கார்த்திக்கின் இடது கண் பாதித்து பார்வை பறிபோனது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்தில் புகார் அளித்தோம். எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்வை பறிபோன தனது மகனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, காவல்துறையால் தாக்கப்பட்டதில் பார்வை பறிபோனதற்கான மருத்துவ ஆவணங்கள் உள்ளன. இழப்பீடு வழங்குவது அரசின் கடமை என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், போராட்டக்காரர்கள் வீசிய கற்களால்தான் கண் பார்வை பறிபோனது என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பார்வை பறிபோன இளைஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 12 வாரங்களில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
The post 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் கண் பார்வை பறிபோன இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.
