சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை முக்கிய நிலையங்களில் மட்டும் நிற்கும்: விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்

செங்கல்பட்டு: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் – ஆவடி – திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்களில் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மிக குறைந்த கட்டணம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர்.

அலுவலக நேரங்களில் இந்த ரயில்களில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்த மின்சார ரயில்கள் அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரெயில் பெட்டிகள் ஆகும். இந்த ரயில் சேவையில் ஏ.சி பெட்டிகளை இணைக்க வேண்டும், என கோரிக்கை ரயில் பயணிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புறநகர் ரயில் 1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயிலாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஏசி மின்சார ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட்டு, சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படவுள்ளது. சில நேரங்களில் பராமரிப்புகாக சனிக்கிழமை ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மற்ற ரயில்களுக்கான ரயில் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த மாற்றங்களால் பயணிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது.

அதே போல் இந்த ஏசி புறநகர் ரயில் தாம்பரத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு 6.45 மணிக்கு வந்தடையும். அதே போல் சென்னை கடற்கரயிலிருந்து 7 மணிக்கு புறப்பட்டு 7.48 மணிக்கு தாம்பரத்தில் நின்று செல்லும். அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். செங்கல்பட்டிலிருந்து 9 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 9.38 மணிக்கு வந்து சேரும். அங்கு 2 நிமிடம் நின்று 10.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

பின்னர் மதியம் 3.45 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு 4.20 மணிக்கு வந்தடையும். செங்கல்பட்டிற்கு 5.25 மணிக்கு சென்றையும். பின்னர் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 6.23 மணிக்கு சென்றையும். அங்கிருந்து சென்னை கடற்கரைக்கு 7.15 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு இரவு 8.30 சென்று ஷெட்டுக்கு புறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த ரயிலுக்கான எண் மற்றும் தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு ரூ.65 முதல் 80 வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் இந்த ரயிலுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படவுள்ளது. இந்த சீசன் டிக்கெட் வைத்திருந்தால் மற்ற புறநகர் ரயிலிலும் செல்லலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த ஏசி மின்சார ரயில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வந்தடைய 1.35 மணி நேரம் ஆகிறது. சாதாரண மின்சார ரயிலில் 1.50 மணி நேரம் ஆகிறது. இதன் மூலம் 15 முதல் 20 நிமிடங்கள் மிச்சமாகிறது.

* நிற்கும் இடங்கள்
புறநகர் ஏசி ரயில்கள் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

* நேர அட்டவணை
* காலை 5.45 – 6.45 தாம்பரம்- கடற்கரை
* காலை 7.00 – 8.35 கடற்கரை – செங்கல்பட்டு
* காலை 9 – 10.30 செங்கல்பட்டு – கடற்கரை
* மதியம் 3.45 – 5.25 கடற்கரை – செங்கல்பட்டு
* மாலை 5.45 – 7.15 செங்கல்பட்டு – கடற்கரை
* இரவு 7.35 – 8.30 கடற்கரை – தாம்பரம்

The post சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை முக்கிய நிலையங்களில் மட்டும் நிற்கும்: விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் appeared first on Dinakaran.

Related Stories: