திருவண்ணாமலை, மார்ச் 18: திருவண்ணாமலை திருவூடல் தெருவில் கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் எடுத்தபோது, படிக்கட்டுகள் இடிந்து விழுந்த வீட்டின் உறுதித்தன்மை பாதித்ததால், வீட்டுக்குள் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். திருவண்ணாமலை திருவூடல் தெருவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதையொட்டி, சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்படுகின்றன. அதற்காக, அந்த பகுதியில நேற்று சாலை அமைபதற்கான வடிகால்வாய் தோண்டும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் நடந்தது. அப்போது, அங்குள்ள ஒரு வீட்டையொட்டி பள்ளம் தோண்டியபோது திடீரென வீட்டின் படிக்கட்டுகள் இடிந்து சரிந்தன. மேலும், பழைய கட்டிடத்தின் உறுதி தன்மையும் பாதிக்கப்பட்டது.
வீட்டுக்கும் சாலைக்கும் இடையே பெரிய பள்ளம் ஏற்பட்டதால், வீட்டுக்குள் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. அதைத்தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டுக்குள் இருந்த இரண்டு முதியவர்கள் உட்பட ஐந்து பேரை பாதுகாப்பாக மீட்டு, வெளியே அழைத்து வந்தனர். வீட்டின் உறுதி தன்மை பாதித்திருப்பதால், வீட்டில் குடியிருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால், அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக உறவினர் வீடுகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post இடிந்த வீட்டுக்குள் 5 பேர் சிக்கினர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் திருவண்ணாமலையில் பரபரப்பு appeared first on Dinakaran.