போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவுக்குள் வந்தால் 7 ஆண்டுகள் சிறை: ரூ.10 லட்சம் அபராதம்; ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, குடியுரிமை மற்றும் அந்நியநாட்டு மக்கள் மசோதா 2025 கடந்த 11ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் மசோதாவை தாக்கல் செய்தார். அதன்படி, நாட்டின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு வௌிநாட்டினரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு விடுதிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை வௌிநாட்டினர் பற்றிய தகவல்களை குடிவரவு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதேபோல், இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பயணிகள், பணியாளர்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். உரிய பயண ஆவணங்களின்றி இந்தியாவுக்கு வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இதேபோல் போலியான பயண ஆவணங்களை பயன்படுத்தி இந்தியாவுக்குள் வருவது, தங்குவது கண்டறியப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

The post போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவுக்குள் வந்தால் 7 ஆண்டுகள் சிறை: ரூ.10 லட்சம் அபராதம்; ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: