உடுமலை: தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டுக்கு உடுமலை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உடுமைலையை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மதுசூதனன் கூறியதாவது: வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்களாக 31 திட்டங்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தோட்டக்கலை பயிர்களை அதிகப்படுத்துதல், கிராமங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்தல், மக்காச்சோளத்திற்கான வளர்ச்சிக்கு 47 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஒருங்கிணைந்த தென்னை நோய் கட்டுப்பாடு ஏற்பாடு செய்திருப்பது, விவசாயத்தில் ஈடுபடும் வேளாண் பட்டதாரிகளுக்கு உதவி செய்தல், மலைவாழ் மக்கள் பயனடையும் உழவர் முன்னேற்ற திட்டம், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி இருப்பது,
இயற்கை வேளாண்மை குழுக்கள், உயர் மதிப்பு கொண்ட மரங்கள் வளர்ப்பதற்கு உதவுவது, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகள் உற்பத்தி மையங்கள் அமைப்பது, பாரம்பரியமான காய்கறி சாகுபடி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, வேளாண் பொருட்களுக்கு மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட ரூ.50 கோடி மானியம் வழங்கியுள்ளது, விதைப்பு முதல் அறுவடை வரையும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது உட்பட நல்ல அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். சாமராயபட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி கூறியதாவது: வேளாண் பட்ஜெட்டில் 2021 முதல் 2024 வரை 1.47 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்கப்படும் என்றும், இதற்கு ரூ.297 கோடி ஒதுக்கியுள்ளதும் வரவேற்கத்தக்கது. நெல் சாகுபடியை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானாவாரி நிலங்களுக்கு மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
குடிமங்கலம் ஒன்றியம் அடிவெள்ளியை சேர்ந்த விவசாயி நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 ஆக உயர்த்தியது, விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி இருப்பது, விவசாயத்தில் ஈடுபடும் வேளாண் பட்டதாரிகளுக்கு உதவி என பல்வேறு நல்ல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ.20 கோடியில் உடுமலை உள்ளிட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கூடுதலாக குடோன்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், விளை பொருட்களை எளிதாக இருப்பு வைக்க முடியும். இயற்கை வேளாண்மைக்கு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய விவசாயம் பாதுகாக்கப்படும். வேளாண் பட்டதாரி இளைஞர்களை கொண்டு உழவர் நல மையங்கள் அமைப்பது அனைத்து தரப்பினருக்கும் உதவுவதாக இருக்கும். வேளாண் வளர்ச்சிக்கும் உழவர் நலனுக்குமான பட்ஜெட்டை வரவேற்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பாலதண்டபாணி கூறியதாவது: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் நவீன வேளாண்மை சார்ந்த அடிப்படை கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு, இயற்கை வேளாண்மை, துண்ணுயிர் பாசனம், கூடுதல் மின் இணைப்பு, விதை மானியம் ஆகியவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. அதேபோல், குளிர் பதன கிடங்குகள், உலர் களங்கள், கூடுதல் நெல் கொள்முதல் மையம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கவும், பாசன திட்டத்தை மேம்படுத்த ஏரி, குளம், கால்வாய்கள் பராமரிக்கவும், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வேளாண் பட்ஜெட்; உடுமலை விவசாயிகள் வரவேற்பு appeared first on Dinakaran.