பிரதமர் வருகை தள்ளிப்போவதால் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு தாமதம்: விரைவில் திறக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்

மண்டபம்: பிரதமர் மோடி வருகை குறித்த தகவல் முறையாக இல்லாததால், புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போகிறது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் ரூ.535 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தயாராக உள்ளனர். புதிய ரயில் பாலத்தை திறந்து, ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் பிரதமர் மோடியை அழைத்துள்ளது. இதற்காக பாம்பன் சாலை பாலத்திலிருந்து பிரதமர் மோடி கொடி அசைத்து வைத்து, ரயில் போக்குவரத்தை இயக்கி வைப்பது, தூக்குப்பாலத்தை உயர்த்தி கப்பல் செல்வது உள்ளிட்டவற்றை, ஒத்திகை நிகழ்ச்சியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்று முறை நடத்தி இந்திய ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆனால், பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடியின் வருகை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதனால் பாலத்திறப்பு விழா தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் ராமேஸ்வரம் வரை ரயிலில் செல்ல முடியாமல் சுற்றுலாப்பயணிகள் மண்டபத்திலேயே இறங்க வேண்டி உள்ளது. எனவே, பிரதமரின் வருகையை உறுதி செய்து, விரைவில் பாலத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளில், ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக இறங்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பிரதமர் வருகை தள்ளிப்போவதால் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு தாமதம்: விரைவில் திறக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: