இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சார்பில் எடப்பாடிக்கு ஈரோட்டில் நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் மீண்டும் உருவானது. அப்போது முதல் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே செங்கோட்டையன் கூறுவதை தவிர்த்து வந்தார். அவரது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படம் போடாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இந்த பரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்திற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். நேற்று முன்தினம் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்யும்போது, செங்கோட்டையன் மட்டும் வெளியில் செல்லாமல் இருந்தார். எம்எல்ஏக்கள் வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். இந்தநிலையில், சபாநாயகர் அப்பாவுவை, செங்கோட்டையன் நேற்று முன்தினம் அவரது அறையில் திடீரென சந்தித்து பேசினார்.
இந்தநிலையில், நேற்றும் செங்கோட்டையன் சபாநாயகருடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தினார். சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்தித்து பேசியபோது, தலைமை செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் செங்கோட்டையன், எடப்பாடியை புறக்கணித்துவிட்டு நேரடியாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். அதிமுகவில் எடப்பாடியுடன், செங்கோட்டையன் மோதிவரும் நிலையில் சபாநாயகரை செங்கோட்டையன் தனியாக சந்தித்து பேசியிருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சபாநாயகரை சந்தித்தது ஏன்?
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தது ஏன் என செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்டபோது, “என் தொகுதி பிரச்னை தொடர்பாக சபாநாயகரை சந்தித்தேன். எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். இன்றுகூட 6, 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்தோம்; சபாநாயகர் அறையில் இருந்தபோது, அங்கு வந்த சுற்றுச்சூழல் அமைச்சரிடம் மனு அளித்தோம்” என்றார்.
பேரவை வளாகத்தில் நிருபர்களை எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார். அப்போது, செங்கோட்டையன் ஏன் உங்களை தவிர்க்கிறார்? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கையில், ‘‘ஏன் தவிர்த்தார் என்று அவரை போய் கேளுங்கள். அவர கேட்டா தானே காரணம் தெரியும். இங்க இன்னும் நிறைய பேர் வரவில்லை. அவர்களை பற்றி எல்லாம் கேக்குறீங்களா, நான் என்னைக்குமே யாரையுமே எதிர்பார்ப்பதில்லை. தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்னை குறித்த கேள்வியை இங்கு கேட்க வேண்டாம். நாங்க சுதந்திரமா செயல்படுகிற கட்சி. இங்கே யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எங்கள் கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட எந்த தடையும் கிடையாது’’ என்று ஆவேசமாக கூறினார்.
இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இருவருக்கும் சுமுக உறவு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கருத்து தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்க மறுத்தார். இதனிடையே சட்டப் பேரவையில் செங்கோட்டையனை சமாதானம் செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்ட சம்பவமும் தெரிய வந்துள்ளது. செங்கோட்டையனிடம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.அன்பழகன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் எதிரொலி பேரவை தலைவருடன் செங்கோட்டையன் சந்திப்பு: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.