×

உரிய அனுமதியின்றி ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு மூன்று சரக்கு கப்பல் வருகை: கடற்படை, மரைன் போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு அனுமதியின்றி வந்த 3 பெரிய சரக்கு கப்பல்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கடற்படை மற்றும் மரைன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் இருந்து ராமேஸ்வரம் பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் சரக்கு ஏற்றும் மூன்று பெரிய கப்பல்கள் வந்தன. இது ஓலைக்குடாவுக்கு நேராக கடலுக்குள் 5 நாட்டிக்கல் தூரத்திலும், மீன்பிடி துறைமுகத்திற்கு நேராக 6 நாட்டிக்கல் தூரத்திலும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

இது கோவாவின் நந்தி சாகர் எனும் சரக்கு வாணிபம் செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமானது. இது குஜராத் மாநிலத்தில் சரக்கு ஏற்ற வந்தது. சுமார் 200 அடி நீளமும், 60 அடி அகலமும் உடைய இந்த கப்பல்களில் மொத்தம் 30 பேர் உள்ளனர். எவ்வித முன் அனுமதியும் இன்றி வந்ததால் ஏஜென்ட்கள் மூலம் அரிச்சல்முனை மணல் தீடை பகுதியை கடக்க திட்டமிட்டி இருந்துள்ளனர். மிகவும் பெரிய கப்பல் என்பதால் மணல் தீடை கால்வாய் வழியே கடந்து செல்வதற்கான சாத்திய கூறுகள் இல்லாததால், நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

துறைமுக அதிகாரிகள் அனுமதி இன்றி ஆபத்தான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல்கள் குறித்த தகவலை துறைமுக அதிகாரிகள் இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். நேற்று இந்திய கடற்படை அதிகாரிகள், எஸ்ஐ காளிதாஸ் தலைமையில் மரைன் போலீசார் நேரில் சென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆய்வு செய்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினர்.

உரிய அனுமதியின்றி இப்பகுதியில் கப்பல்களை நிறுத்தக் கூடாது என எச்சரித்து, உடனடியாக புறப்பட்டுச் செல்லுமாறு உத்தரவிட்டனர். சரக்கு கப்பல்கள் நேற்று மாலை வரை திரும்பிச் செல்லாமல் நின்றன. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு மிகக் குறுகிய தொலைவில் ஆபத்தான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று பெரிய கப்பல்களால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

நேற்று பாக் ஜலசந்தி கடல் சற்று சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் இரவில் கப்பலின் நங்கூரம் கயிறு அறுந்து அல்லது இழுபட்டு துறைமுகப் பகுதிக்கு வந்தால், மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதம் அடையும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கலக்கம் அடைந்தனர். முன் அனுமதியின்றி ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்த சரக்கு கப்பல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post உரிய அனுமதியின்றி ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு மூன்று சரக்கு கப்பல் வருகை: கடற்படை, மரைன் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rameshwaram Sea ,Navy, ,Marine Police ,Rameshwaram ,Indian Navy ,Rameshwaram Bagh Strait ,Kolkata ,Marine Police Investigation ,Dinakaran ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...