“மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டியது கட்டாயம் ஆகும். யுஜிசி பிரதிநிதி உள்ளிட்ட 4 பேர் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கடந்த அக்டோபர் 24-ம் தேதி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான அரசாணையை தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கடந்த ஜனவரி 28ம் தேதி அன்று வெளியிட்டது.
அந்த அரசாணையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, வேண்டுமென்றே யுஜிசி பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார். யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படிதான் பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும் என்று பேராசிரியர் பி.எஸ்.ஸ்ரீஜித் – டாக்டர் எம்எஸ்.ராஜஸ்ரீ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் முற்றிலும் முரணானது.
அதனால், யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் நியமித்த தேடுதல் குழு தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்ற விவகாரம் காரணமாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை திரும்பப்பெற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
