சேந்தமங்கலம், மார்ச் 10: கொல்லிமலை மலைப்பாதையில், 30 கொண்டை ஊசி வளைவில் மண் சரிந்த இடத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கொல்லிமலையில் தொடர் மழை பெய்தது. இதில் மலைப்பாதையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் மண் சரிந்து விழுந்தது. இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மண்ணை அள்ளி அப்புறப்படுத்தி, அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தினர். இந்நிலையில், நெடுஞ்சாலை துறை சார்பில், மண் சரிந்து விழுந்த இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
30வது கொண்டை ஊசி வளைவு அருகே, பெரிதாக மண் சரிந்து விழுந்தது. சாலையின் ஓரத்திலேயே இந்த இடம் இருப்பதால் அங்கு மணல் மூட்டையில் அடுக்கி வைத்து, பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில் ₹25 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இளநிலை உதவி பொறியாளர் சுப்பிரமணியம் கூறுகையில், 30, 31 கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத் துறை சார்பில், மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய வளைவுகள் கொண்ட இடமாக இருப்பதால், உடனடியாக தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
The post தடுப்பு சுவர் அமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.
