திருக்கோவிலூர், மார்ச் 8: திருக்கோவிலூர் அடுத்த கீரனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை(43) இவருக்கு கடந்த 2006ம் ஆண்டு நில உடமை மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இடம் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனை ரத்து செய்யக்கோரியும் சந்தப்பேட்டையைச் சேர்ந்த மோகன் திருக்கோவிலூர் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவை விசாரித்த சார் ஆட்சியர் ஆனந்த் குமார்சிங் இவ்வழக்கு தொடர்பாக இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
வட்டாட்சியர் அறிக்கையின் அடிப்படையிலும், கிராம கணக்குகளின் அடிப்படையிலும், நேரடி விசாரணையின்படி சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக ஏழுமலை என்பவருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து பழைய நிலையிலேயே வைக்கும்படி சார் ஆட்சியர் கடந்த மாதம் உத்தரவிட்டார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த ஏழுமலை அவரது மனைவி மகாலட்சுமி (38) மகன் தயாநிதி மாறன் (18), மகள் ப்ரீத்திஸ்ரீ (13) ஆகியோர் நேற்று திருக்கோவிலூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம் என வருவாய்த்துறையினரும், போலீசாரும் அறிவுறுத்தினர். இதனைக் கேட்க மறுத்த ஏழுமலை குடும்பத்துடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில் பணி செய்யவிடாமல் தடுப்பதாக வருவாய் துறை அலுவலர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உதவி ஆய்வாளர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
The post துணை ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.