லண்டனில் நடைபெற உள்ள புதிய சிம்பொனி இசை அரங்கேற்றம் நாட்டிற்கு கிடைத்த பெருமை: இளையராஜா பெருமிதம்

மீனம்பாக்கம்: லண்டனில் நடைபெற உள்ள புதிய சிம்பொனி இசை அரங்கேற்றம் நாட்டிற்கு கிடைத்த பெருமை என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதம் தெரிவித்தார். இசையமைப்பாளர் இளையராஜா, வேலியன்ட் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை நாளை லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார். இதற்காக இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக, உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் லண்டன் குழுவுடன் வாசித்து, ரசிகர்கள் கேட்டு இசையை வெளியிட இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி லண்டனில் அப்பல்லோ அரங்கில் நடைபெற உள்ளது. அங்கு வந்திருக்கக்கூடிய ரசிகர்களுக்கு, இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும்.

இதனால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது? உங்களுக்கு அப்படி இருக்கும்பொழுது, எனக்கு எப்படி இருக்கும்? இதை ஒரு மனிதனாக உணர்கிறேன். எல்லோரும் வாழ்த்தி இசை நிகழ்ச்சி நன்றாக நடப்பதற்கு இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். இன்க்ரிடபிள் இந்தியா போன்று, இன்கிரிடபிள் இளையராஜா. இனிமேல் இதுபோன்று யாரும் வரப்போவதும் இல்லை. இதுவரையில் வந்ததும் இல்லை. இது தனிப்பட்ட எனக்கு கிடைத்த பெருமை அல்ல. இந்த நாட்டிற்கு கிடைத்த பெருமை.

அநாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்கக் கூடாது. என்னுடைய வேலையில், நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்கிறீர்களா? என்பது உங்களுக்குத்தான் தெரியும். எல்லோரும் சேர்ந்துதான் நான். நம்முடைய பெருமையைத் தான் அங்கே சென்று நான் பறை சாற்றுகிறேன். இறைவனுடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post லண்டனில் நடைபெற உள்ள புதிய சிம்பொனி இசை அரங்கேற்றம் நாட்டிற்கு கிடைத்த பெருமை: இளையராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: