ஒரே வாக்காளர் அட்டை எண் மோசடி 24 மணி நேரத்தில் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் கெடு

புதுடெல்லி: வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அட்டை எண் மோசடியை தேர்தல் ஆணையம் 24 மணி நேரத்தில் ஒப்புக் கொள்ளாவிட்டால், கூடுதல் ஆவணங்களை வெளியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கெடு விதித்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லியை போல மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்த வெற்றி பெற பாஜ திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், ‘‘வெவ்வேறு மாநிலங்களில் வாக்காளர்களுக்கு ஒரே அடையாள அட்டை எண் தரப்பட்டிருந்தாலும், தொகுதி, வாக்குச்சாவடி மையங்கள் வேறுபடும். நிர்ணயிக்கப்பட்ட தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே ஒரே வாக்காளர் அட்டை எண் தரப்பட்டிருப்பது போலி வாக்காளர்களைக் குறிக்காது’’ என்றது.

இந்த விளக்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கவில்லை. இந்நிலையில், அக்கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன், மூத்த எம்பிக்கள் சகாரிகா கோஸ், கீர்த்தி ஆசாத் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது: ஒரு மாநிலத்தில் வசிப்பவர்கள் மட்டுமே அந்த மாநிலத்தில் வாக்களிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மேற்கு வங்க வாக்காளர்கள் மட்டுமே இங்கு வாக்களிக்க வேண்டும். வெளிநபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அப்படிப்பட்ட மற்ற மாநிலத்தவர்களை ரகசியமாக அழைத்து வரப்படுகிறார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதற்கு பின்னணியில் பாஜவின் சதித்திட்டம் இருப்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஒரு விஷயத்திற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறோம். அவர்கள் வாக்காளர் அட்டையில் மோசடி நடந்திருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் அதை முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு 24 மணி நேரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் ஆவணங்களை செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு வெளியிடுவோம் என்றனர்.

The post ஒரே வாக்காளர் அட்டை எண் மோசடி 24 மணி நேரத்தில் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் கெடு appeared first on Dinakaran.

Related Stories: