தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணிபுரிகின்றனர்; இந்தி படித்தவர்கள் வேலை தேடி தமிழகத்திற்கு வருகின்றனர்: திருச்சி சிவா பேச்சு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் 1000 பேருக்கு சமபந்தி அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகரில் நேற்று நடந்தது.

திமுக சட்டதிட்ட திருத்த குழு செயலாளர் ரா.கிரிராஜன் தலைமை வகித்தார்.
திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ்‌‌, தலைமை சட்ட தலைமை ஆலோசகர் வில்சன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கல்யாணசுந்தரம், சண்முகம், என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, கலாநிதி விராசாமி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருச்சி சிவா பேசியதாவது:
தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டுள்ள பல திட்டங்கள் தற்போது வெளிமாநிலங்களிலும், ஏன் வெளிநாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் போன்ற பல திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்று மறைமுகமாக அல்லது நேரடியாக இந்தி மொழியை ஏற்றாக வேண்டும் என ஒன்றிய அரசு முயல்கிற போது தமிழகத்தில் அது முடியாது என நாங்கள் கூறி வருகின்றோம். தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை படித்துவிட்டு உலகம் முழுவதும் உயர்ந்த பதவிகளில் பணிபுரிகின்றனர்.

இந்தி படித்தவர்கள் கூலி வேலை தேடி தமிழகத்துக்கு வருகிறார்கள். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்க பார்க்கிறார்கள். நாங்கள் குரல் கொடுத்த பின்பு குறையாது என்று கூறுகிறார்கள். இங்கு குறையாது என்று கூறுபவர்கள் வட மாநிலங்களில் அதிகரிக்காது என கூற முடியுமா. இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணிபுரிகின்றனர்; இந்தி படித்தவர்கள் வேலை தேடி தமிழகத்திற்கு வருகின்றனர்: திருச்சி சிவா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: