தேவாலய விழாவில் மின்சாரம் பாய்ந்து; 4 மீனவர்கள் உடல் கருகி பரிதாப பலி

புதுக்கடை: இனயம்புத்தன்துறை ஆலய விழா பணிகளின்போது ஏணியில் மின்சாரம் பாய்ந்து 4 மீனவர்கள் உடல் கருகி பலியாகினர். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் கடற்கரை கிராமத்தையொட்டிய இனயம்புத்தன்துறை பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது.

இன்று (3ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை திருவிழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நிறைவு விழாவில் அலங்கார தேர் பவனி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக தேர்பவனி செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ளவற்றை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக சுழலும் சக்கரத்துடன் கூடிய உயரமான ஏணியை பயன்படுத்தி, தடைகளை அகற்றும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டனர். ஏணியை அதே பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களான விஜயன் (52), ஜஸ்டஸ் (33), சோபன் (45), மைக்கேல் பின்டோ (42) ஆகிய 4 பேர் உருட்டி சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மேல் பகுதியில் சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியது. இதில் ஏணியில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் ஏணியை உருட்டி சென்ற 4 பேரும் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடினர். யாரும் அவர்கள் பக்கத்தில் நெருங்க முடியவில்லை. ஏணியில் சிக்கிய 4 பேர் மீதும் தீப்பொறி பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் 4 பேரும் உடல் கருகி பலியாகினர். உடனடியாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்தை கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post தேவாலய விழாவில் மின்சாரம் பாய்ந்து; 4 மீனவர்கள் உடல் கருகி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: