இளமை காலத்தில் சொகுசா சொத்து சேர்த்துவிட்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வருகிறார்கள்: விஜய் மீது திருமாவளவன் தாக்கு

தர்மபுரி: இளமை காலத்தை சொகுசாக கழித்து விட்டு, நல்லா சொத்து சேர்த்து விட்டு காலாவதியான காலத்தில் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள் என்று விஜய்யை தாக்கி திருமாவளவன் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே பூமிநத்தம் பகுதியில் கடந்த 24ம் தேதி பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலா, திருமஞ்சி, செண்பகம் ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறினார். மேலும், தலா ₹1 லட்சம் நிவாரண நிதியும் வழங்கினார்.

தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது:
கடந்த 35 ஆண்டுகால உழைப்பால், மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறி இருக்கிறோம். சில பேர் 50, 60வயது வரை சினிமாவில் நடித்து விட்டு, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொத்தை சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாய் வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள். சினிமாவின் மூலம் நன்றாக சம்பாதித்து விட்டு, வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, அரசியலுக்கு வருகிறார்கள். அவர்கள் இதுபோன்று ஊர் ஊராய் சென்று பேசத் தேவையில்லை. உடனே, கட்சி தொடங்கலாம். ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம். ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக வாழ்க்கையை முழுமையாக தொலைத்து விட்டு, தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் எனது இளமை முழுவதையும் இழந்துதான் என்னால் இந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடிந்தது.

மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு, இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து, வாழ்க்கையை தொலைத்து விட்டுதான், இந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடிந்தது. டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கொள்கை பிடிப்பு இருக்கிறது. கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது. நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்றோ இந்த கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருப்பேன். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. இது காலத்தின் கட்டளை. இதனை அரசியல் வல்லுநர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

 

The post இளமை காலத்தில் சொகுசா சொத்து சேர்த்துவிட்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வருகிறார்கள்: விஜய் மீது திருமாவளவன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: