வேலூர், பிப்.27: வேலூரில் குடும்ப தகராறில் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த கீழ் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சரண்யா(30). இவர் வேலூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தங்கராஜ் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் முதல் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் குழந்தையை அவரது பாட்டி வீட்டுக்கு அனுப்ப தங்கராஜ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் தம்பதிக்கு இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த சரண்யா ஆயுதப்படை அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது கணவர் தங்கராஜ், சரண்யாவை மீட்டு உடனடியாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post வேலூரில் குடும்ப தகராறு: பெண் காவலர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.
