அடுத்தடுத்து மாயமான அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், கடலூர் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து கடந்த 20 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே காணாமல் போன இருவரின் நெருங்கிய கூட்டாளியான புதூர் கிராமத்தை சேர்ந்த பால்ராஜ்(25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பால்ராஜ் நெய்வேலி என்எல்சி சுரங்க மணல்மேட்டின் அருகில் குவாரி நடத்தி வரும் கணேசன் என்பவரிடம் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார்.
இவர் மாயமான அப்புராஜ், சரண்ராஜ் மற்றும் சிலருடன் குவாரிக்கு அருகில் தொடர்ந்து மது அருந்தி வந்ததாகவும், கடந்த ஜனவரி 22ம் தேதி, குவாரிக்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்த போது, பால்ராஜ் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து லாரியில் இருந்து இரும்பு ராடு எடுத்து வந்து அப்புராஜை அடித்து கொன்றுள்ளார். தடுக்க முயன்ற சரண்ராஜையும் அடித்து கொன்று இருவரையும் என்எல்சி மணல்மேட்டில் புதைத்துள்ளார். மேலும் அவர்கள் உடல் தெரியக்கூடாது என்பதற்காக ஒரு லோடு லாரி மண்ணை கொட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, நேற்று கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புராஜ், சரண்ராஜ் ஆகிய 2 பேர் உடலையும் தோண்டி வெளியே எடுத்தனர். பின்னர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ‘லாரி டிரைவர் பால்ராஜ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட சரண்ராஜ் மற்றும் அப்புராஜ் ஆகிய இருவரும் டிரைவர் பால்ராஜின் சகோதரியை கிண்டல் செய்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறின் போது லாரியில் இருந்த இரும்பு ராடால் அடித்து கொன்றதாகவும் கூறி உள்ளார்.
இதையடுத்து பால்ராஜை கைது செய்த போலீசார் அவருக்கு உறுதுணையாக இருந்த கூட்டாளிகளை தேடி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் முழுமையான காரணமும், உடன் இருந்தவர்கள் குறித்த விவரமும் தெரியவரும்’ என்றார். சகோதரியை கிண்டல் செய்ததாக கூறி, தனது நண்பர்கள் 2 பேரை லாரி டிரைவர் அடித்து கொன்று என்எல்சி மணல்மேட்டில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் 2 வாலிபர்களை அடித்து கொன்று என்எல்சி அருகில் புதைத்த நண்பர்: நெய்வேலியில் பயங்கரம் appeared first on Dinakaran.
