சுவர் விளம்பரம் எழுதுவதில் தகராறு திமுகவினருடன் பாஜ மோதல்

திருத்தணி: சுவரில் விளம்பரம் எழுதும் பணியை பாஜவினர் தடுத்ததால், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ம.கிரண் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி ரயில் நிலையம் அருகே, ம.பொ.சி சாலையில் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான சுவரில் பாஜவினர் தாமரை சின்னம் வரைந்து வருகின்றனர். அதே சுவரில் காலியாக உள்ள பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சுவர் விளம்பரம் எழுதும் பணியில் நேற்று திமுகவினர் ஈடுபட்டனர்.

அப்போது, சுவர் முழுவதும் பாஜ சார்பில் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளதாகவும், சுவரில் திமுக விளம்பரம் செய்ய முடியாது என்றும் கூறி பாஜவினர் திமுகவினரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி ம.கிரண் தலைமையில், இளைஞரணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பாஜவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கெட் அவுட் மோடி என்று கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர். இதனையடுத்து, பாஜவினர் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து காலியாக உள்ள சுவரில் திமுகவினர் விளம்பரம் எழுதும் பணியில் ஈடுபட்டனர். இதனால், திருத்தணி ம.பொ.சி சாலையில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இந்தி அழிப்பு : தமிழ்நாட்டில், இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருத்தணி ம.கிரண் தலைமையில், திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள 3 நடைமேடைகளில் உள்ள பெயர் பலகைகளில் இந்தி மொழி எழுத்துகளை கருப்பு மை பூசி அழிக்கும் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் நேற்று ஈடுபட்டனர். தொடர்ந்து, திமுக கொடிகளை கையில் ஏந்தி ரயில் நிலைய பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி மொழி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அனுமதியின்றி ரயில் நிலையத்தில் நுழைந்து பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண் உட்பட 20 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

The post சுவர் விளம்பரம் எழுதுவதில் தகராறு திமுகவினருடன் பாஜ மோதல் appeared first on Dinakaran.

Related Stories: