கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு காங். மூத்த தலைவர்களை விமர்சிக்க வேண்டாம்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக 25 மாவட்ட தலைவர்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தியது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், டெல்லியில் முகாமிட்டு செல்வப்பெருந்தகையை மாற்ற கோரி மூத்த தலைவர்களை சந்தித்தனர்.

குறிப்பாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இந்த விவகாரங்களால் தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் தலைதூக்கிய நிலையில் செல்வப்பெருந்தகை பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விஷயங்கள் குறித்து பொது ஊடகங்களில் பகிரங்கமாக கருத்து கூறப்பட்டு வருகிறது. காங்கிரஸ், ஒரு ஜனநாயக இயக்கம். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. அதை கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்வதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. அதற்கு மாறாக ஊடகங்களின் மூலமாக கருத்து கூறுவதையும், விரும்பத்தகாத நிகழ்வுகளையும் அனைவரும் தவிர்க்க வேண்டும்.

அதே நேரத்தில் என் மீதான விமர்சனங்களை தாங்கி கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குறித்து எத்தகைய விமர்சனங்களையும் அனுமதிக்க முடியாது. அவை கட்சி விரோத நடவடிக்கைகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு காங். மூத்த தலைவர்களை விமர்சிக்க வேண்டாம்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: