கொசப்பூர் உபரிநீர் கால்வாய் பகுதியில் கழிவுகளை எரித்தவர் மீது காவல் நிலையத்தில் புகார்: அதிகாரிகள் நடவடிக்கை

 

திருவொற்றியூர், பிப்.24: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட கொசப்பூரில், புழல் ஏரி உபரி நீர் கால்வாய் அருகில், கடந்த 2 நாட்களுக்கு முன், இரவில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை லாரியில் கொண்டுவந்து கொட்டி எரித்துள்ளனர். இதன்காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கடும் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் கொசப்பூர் பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். அங்கு டன் கணக்கில் குப்பை கிழவுகள் எரிக்கப்பட்டும், சிதறியும் கிடந்தது. அவற்றை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதன்பின்னர் இந்த இடத்திற்கு செல்லும் பாதையில் பெரிய பள்ளங்களை தோண்டி, வாகனங்கள் உள்ளே செல்லாதபடி தடுத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘இங்கு குப்பை கழிவுகளை கொட்டி எரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பால் பண்ணை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சில தினத்துக்கு முன் சடையங்குப்பம், கொசஸ்தலை ஆறு அருகே அனுமதி இல்லாமல் ரயில்வே துறையின் கழிவுகளை கொட்டி எரித்த தனியாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இங்கு குப்பை கழிவுகளை எரித்தவர்கள் அடையாளம் கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

The post கொசப்பூர் உபரிநீர் கால்வாய் பகுதியில் கழிவுகளை எரித்தவர் மீது காவல் நிலையத்தில் புகார்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: