இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அதன்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளின் பின்பக்க வழியாகச் சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதை ஞானசேகரன் வாடிக்கையாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி கொள்ளைக்கு செல்வதும் 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கரணையில் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கும் போது வெளி மாநில கூட்டாளி ஒருவரை ஞானசேகரன் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கானத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது சுமார் 16க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், சிறை சென்று வந்த பின்னர் திருந்தி வாழப் போவதாகக் கூறி பிரியாணி கடை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து காலையில் பிரியாணி கடை நடத்திவிட்டு நள்ளிரவில் காரில் சென்று சென்னை புறநகர் பகுதிகளில் கைவரிசை காட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் 7க்கும் மேற்பட்ட வீடுகளை நோட்டமிட்டு 250 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஞானசேகரனை 7 கொள்ளை வழக்கிலும் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், கொள்ளையடித்த நகைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை சுமார் 100 சவரன் நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொள்ளையடிக்கும் போது பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை ஞானசேகரன் வாடிக்கையாக கொண்டிருப்பதும் அப்படி யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பாகவும் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தார், ஜீப் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சுமார் 100 சவரன் நகைகளை பள்ளிக்கரணை போலீசார் மீட்டுள்ளனர்.
The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல்: காலையில் பிரியாணி கடை; இரவில் திருட்டு தொழில் appeared first on Dinakaran.
