திருவொற்றியூர் பகுதியில் காற்று மாசு கட்டுப்படுத்த நவீன கருவி: மாநகராட்சி ஏற்பாடு

திருவொற்றியூர்: வடசென்னைக்குட்பட்ட மணலி மற்றும் எண்ணூர் பகுதியில் ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்கூடங்கள் என 150க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்றிய அரசு நிறுவனமான எம்.எப்.எல், சி.பி.சி.எல், தனியார் நிறுவனங்களான கோரமண்டல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் போன்ற 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல்வேறு ரசாயன கலவையுடன் கூடிய மூலப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்திகளை செய்து வருகிறது.

இவ்வாறு உள்ள உற்பத்தி நிறுவனங்கள் மூலப் பொருட்களை கையாள்வதில் சரியான விதிமுறைகளை கடைபிடிக்காததால் நிறுவனங்களின் புகை போக்கி வழியாக ரசாயன வாயுக்கள், நச்சுத் துகள்கள் போன்றவை வெளியேறி மணலி மட்டுமின்றி திருவொற்றியூர், எண்ணூர் போன்ற பகுதிகளில் காற்றில் கலந்து காற்று மாசு ஏற்படுகிறது. இந்த நச்சுக் காற்றை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு காச நோய், சுவாச கோளாறு, தோல் நோய், இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல், புற்றுநோய், குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களும், பெண்களுக்கு மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த நச்சு காற்று குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களுக்கு மனச்சிதைவு ஏற்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த சமூக நல அமைப்புகள் தொழிற்சாலைகளில் உற்பத்தி கட்டமைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவு, திரவ கழிவு, வாயுவை சரியாக கையாள்வதில்லை, விதிகளை மீறி புகையை வெளியேற்றி காற்று மாசு ஏற்படுத்தி வருகிறது. அதைத் தடுக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் சில ரசாயன கலவையை அதிகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள் ரசாயன மூலப் பொருட்களை சரியாக கையாள தவறுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதை பருகும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைவு, கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், காற்று மாசை தடுக்க இத்தாலி நாட்டில் உள்ள அமைப்புடன் இணைந்து பைலட் திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி உருவாக்கியது.

இதன்படி மணலி பகுதியில் காற்றின் மாசு அளவை கண்டறிய மணலி மண்டல அலுவலகம் மற்றும் பாடசாலை தெருவில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இரு இடங்களில் கடந்த 6 மாதங்களுக்கு முன், நவீன கருவிகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் பதிவாகும் அளவுகளை குறிப்பெடுத்து அதன் அடிப்படையில் மணலி, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் காற்றை சுத்திகரித்து மீண்டும் காற்று கலந்துவிடும் நவீன இந்திரம் வைக்கவும், இத்திட்டம் வெற்றி பெற்றால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் துணையுடன் காற்று மாசு கண்டறியப்படும் அனைத்து பகுதிகளிலும் நவீன் இந்திரத்தை பொருத்தி விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில், ஸ்பிரேயர் என்னும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் அதிநவீன கருவியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக இந்த கருவியின் சோதனை முன்னோட்டம் நேற்று திருவொற்றியூர் கால்வாய் மேம்பாலம் அருகே நடைபெற்றது. இதனை கலாநிதி வீராசாமி எம்பி மற்றும் கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிரத்தியேக லாரியில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி 50 மீட்டர் தூரம் வரை தண்ணீரை பீய்ச்சி அடித்து காற்றில் கலந்திருக்கும் மாசை கட்டுப்படுத்துகிறது. படிப்படியாக இந்த கருவியை அதிகப்படுத்தி அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவொற்றியூர் பகுதியில் காற்று மாசு கட்டுப்படுத்த நவீன கருவி: மாநகராட்சி ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: