தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தை பார்வையிட்டார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 23வது தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டி பிப்ரவரி 18 முதல் 20 வரை சென்னையில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 1,476 பாரா-தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, 155 போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 185 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவில் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் முறையில் இடம்பெற்ற சுடர் ஓட்டத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டிக்கான சுடரை வழங்க பாரீஸ் 2024 பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நவ்தீப் சிங் சுடரை மைதானத்தில் ஏற்றிவைத்தார்.

பாரீஸ் 2024 வெள்ளிப் பதக்கம் வென்ற அர்ஜூனா விருது பெற்ற தமிழ்நாடு பாரா பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் அனைத்து பங்கேற்பாளர்களின் சார்பாக விளையாட்டு வீரர்களின் உறுதிமொழியை வாசிக்க அனைத்து வீரர், வீராங்கனைகளும் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுகொண்டனர். பின்னர் தமிழ்நாடு துணை முதல்வர் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைக்க, விளையாட்டுத் திறன் மற்றும் உணர்வைக் குறிக்கும் வகையில் 500 பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பத்ம பூஷன் தேவேந்திர ஜஜாரியா, இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் சத்ய பிரகாஷ் சங்வான், இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர், ஜெயவந்த் குண்டு ஹமானவர், பாரா தடகள விளையாட்டு சங்க தலைவர் சத்ய நாராயணா, அர்ஜுனா விருது மற்றும் பாராலிம்பிக்ஸில் தங்க பதக்கம் பெற்ற பாரா தடகள வீரர் டாக்டர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருபாகர ராஜா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பாரா தடகள வீரர், வீராங்கனை கலந்து கொண்டனர்.

The post தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: