அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு: சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை

சென்னை: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரான விஜயநல்லத்தம்பி என்பவர் மூலமாக 33 பேரிடம் ரூ.3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ரவீந்திரன் என்பவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் புகார் தரரான ரவீந்திரன் குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத நிலையில் வழக்கில் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் செயல்படும் ஊழல் தடுப்பு பிரிவு ஒன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்தது. அடுத்த கட்டமாக ராஜேந்திர பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு: சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: