ஆளும் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் மட்டுமே கூட்டுக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன : மாநிலங்களவையில் கார்கே கண்டனம்

புதுடெல்லி : வக்பு வாரிய மசோதா தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தனர். மாநிலங்களவை இன்று காலை கூடியதும் வக்பு வாரிய மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அப்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஏற்கப்பட்டது அரசியல் அமைப்புக்கு விரோதமானது என குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “ஆளும் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் மட்டுமே கூட்டுக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. கூட்டுக்குழு அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள், குறிப்புகள் இடம்பெறவில்லை. கூட்டுக்குழு அறிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி கருத்துகளும் இடம்பெற வேண்டும். அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் அதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தப்படும்,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே தான் அளித்த அதிருப்தி கருத்து இடம்பெறவில்லை என்று காங். எம்.பி. நாசர் உசேன் சுட்டிக்காட்டினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் அதிருப்தி கருத்துகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, அமைச்சர் கிரண் ரிஜிஜூ பொய் சொல்வதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post ஆளும் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் மட்டுமே கூட்டுக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன : மாநிலங்களவையில் கார்கே கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: