‘தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி’ : மத்திய அரசுக்கு சசிகலா வேண்டுகோள்!

சென்னை : குடியரசு தின அணிவகுப்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி கலந்து கொள்ள அனுமதி  அளிக்க மத்திய அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் நம் தமிழகத்தின் சார்பாக இடம்பெறக்கூடிய, தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசாக விளங்கக்கூடிய நம் இந்திய தாய் திருநாட்டில் நாம் அனைவரும் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க, நம் தமிழகத்தை சேர்ந்த வ உ சிதம்பரனார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவைப் போற்றும் விதமாக, மத்திய அரசு ’75 ஆசாதி கா அம்ரிட் மஹோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடி வரும் வேளையில், மாநிலங்களும் சுதந்திரம் அடைந்த பவள விழாவைக் கொண்டாடும் வகையில் நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவர்கள் உருவங்கள் அடங்கிய ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற எண்ணுவதை, மத்திய அரசு அதிகாரிகள் கனிவுடன் பரிசீலித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அனுமதி அளிக்க மறுப்பது, மிகுந்த ஏமாற்றதையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், நாம் சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டைக் கொண்டாடுகிற இத்தருணத்தில், சுதந்திரம் பெற காரணமாக இருந்தவர்களை மறந்து விடாமல், அவர்களுக்கு மதிப்பளித்தும், அதே போன்று, நம் வருங்கால சந்ததியினரும், நாட்டின் விடுதலைக்காக போராடிய நமது தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்கின்ற வகையிலும், செயல்படவேண்டிய கடமை, நம் அனைவருக்கும் உள்ளது. இவற்றையெல்லாம் அரசு அதிகாரிகள் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலானாலும், அரசு அதிகாரிகள் நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொண்டு செயல்படும்போதுதான், ஆட்சியாளர்களுக்கும் அது நன்மை அளிக்கக்கூடியதாக அமையும். எனவே, தமிழ் மண்ணின் வரலாற்றையும், அதன் பெருமைகளையும், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களைக் கருத்தில் கொண்டும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தியை, தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்கிற வகையில், மத்திய அரசு தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து உரிய அனுமதியை வழங்கிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். …

The post ‘தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி’ : மத்திய அரசுக்கு சசிகலா வேண்டுகோள்! appeared first on Dinakaran.

Related Stories: