நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சி.கூத்தம்பட்டியில் மயான சாலை சீரமைப்பு பணி முதல்கட்டமாக தோண்டிய நிலையிலே நிற்கிறது. எனவே இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நிலக்கோட்டை ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி சி.கூத்தம்பட்டியில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அனைவரும் விவசாய கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, பொது கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மயான சாலையை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதையொட்டி ஜேசிபி மூலம் சாலையை தோண்டி முதற்கட்ட பணி துவங்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக மயான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சில இடங்களில் சாலையில் மெகா சைஸ் பள்ளம் காணப்படுகிறது.
இதனால் அந்த வழியாக இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்கள் நலன் கருதி மயான சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நிலக்கோட்டை சி.கூத்தம்பட்டியில் முதல்கட்டத்திலே நிற்கும் மயான சாலை பணி appeared first on Dinakaran.
