பின்னர் ஒரு கட்டத்தில் அந்த பெண் லியாஸ் தமிழரசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்ததோடு அந்த பெண்ணுக்கு தெரியாமல் லியாஸ் தமிழரசன் அவருடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் லியாஸ் தமிழரசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்ததில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அந்த பெண்களிடமும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றியதும் தெரிந்தது. இதை தொடர்ந்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் லியாஸ் தமிழரசனை கைது செய்தனர். விசாரணையில், லியாஸ் தமிழரசன் பல பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. எனவே, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, லியாஸ் தமிழரசன் பயன்படுத்திய டேப்லெட்டை போலீசார் சோதனை செய்தபோது, அதில் லியாஸ் தமிழரசன் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லியாஸ் தமிழரசனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு தற்போது திருமணம் ஆகி விட்டதால் அவர்கள் யாரும் லியாஸ் தமிழரசன் குறித்து புகார் அளிக்க முன்வரவில்லை எனவும், இதுவரை அவரால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மட்டும் புகார் அளித்து உள்ளதாகவும், ஒரு பெண் திருச்சியில் இருந்து புகார் அளிக்க வர இருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
லியாஸ் தமிழரசன் டேப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் வீடியோ ஒன்றும் சிக்கி உள்ளது. அதுகுறித்து போலீசார் விசாரணையில் தனது தந்தை ஏழுமலை, தாய் மலர்க்கொடி மற்றும் குடும்பத்தினருடன் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள மாதா கோயிலில் வைத்து கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரை அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியாமல் தான் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. புதிதாக திருமணம் செய்த பெண் எந்த புகாரும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், லியாஸ் தமிழரசன் கடந்த சில ஆண்டாக, வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்து, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும், அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு தொகையை சேலையூர் காவல் நிலைய உயர் அதிகாரிகள் முதல் அனைவருக்கும் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், லியாஸ் தமிழரசனுக்கு முக்கிய ரவுடிகள் சிலருடன், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் சிலருடனும் தொடர்பு இருப்பதால் அவர்கள் மூலம் எளிதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பெற்று அவற்றை விற்பனை செய்து அதிக அளவில் பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
* காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து..
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு லியாஸ் தமிழரசனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவர் மீது சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததாகவும், ஆனால் போலீசார் அந்த புகாரை ஏற்காமல் காவல் நிலையத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து லியாஸ் தமிழரசனிடம் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு கொடுத்து, அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர், லியாஸ் தமிழரசன் மீது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் லியாஸ் தமிழரசனுக்கு சாதகமாகவே செயல்பட்டு காலை முதல் மாலை வரை பேரம் பேசி வந்ததாகவும், பின்னர் இந்த விவகாரம் ஊடகங்களுக்கு தெரிய வந்ததால், வேறு வழியின்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.
* சட்ட விரோத பணத்தில் ஆடம்பர வாழ்க்கை
லியாஸ் தமிழரசன் வசித்து வரும் பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ‘‘லியாஸ் தமிழரசன் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுமஸ்தாக வைத்திருப்பதாலும், அவருக்கு முக்கிய ரவுடிகள் சிலர் தொடர்பில் இருந்ததாலும், பாஜ மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்ததாலும், போலீசாருடன் நெருக்கமாக இருந்ததாலும் இவை அனைத்தையும் பயன்படுத்தி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் அவரைக் கண்டாலே பயப்படும் நிலை இருந்து வந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு அவரது தந்தை ஏழுமலையும் அனைவரையும் மிரட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதுபோன்று அவர் செய்யும் பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அவர் மீது போலீசார் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. போலீசார், லியாஸ் தமிழரசனுக்கு ஆதரவாக உள்ளனர், என்ற தைரியத்தில் தான் லியாஸ் தமிழரசன் தொடர்ந்து இது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். எளிமையாக வாழ்ந்து வந்த அவர்கள் திடீரென கார், பைக், நகைகள், அவர்களது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்வது போன்றவற்றை செய்தனர். இந்த பணம் அனைத்தும் சட்ட விரோதமாக சம்பாதித்தது தற்போது தான் தெரியவந்துள்ளது,’’ என்றனர்.
The post பல பெண்களை ஏமாற்றி பாலியல் வழக்கில் கைதான பாஜ நிர்வாகி கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்றது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் appeared first on Dinakaran.
