வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. கூச்சலிட்டதால் ரயிலில் இருந்து கீழே தள்ளியவர் கைது!

வேலூர்: வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரேவதி என்பவர் பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊருக்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் பயணித்த சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றபோதும் விடாமல் பின்தொடந்து சென்ற நபர்கள் தொந்தரவு செய்துள்ளனர். அப்போது கர்ப்பிணி பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில், ஆத்திரமடைந்த நபர்கள் கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் கர்ப்பிணி பெண் ரேவதிக்கு கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரேவதியை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரேவதியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயிலில் இருந்து தள்ளிவிட்டவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண் காட்டிய அடையாளங்களை வைத்து குற்றவாளியை கைது செய்த போலீசார் கே.வி.குப்பம் அருகே பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பது தெரியவந்தது. கைதான ஹேமராஜ் மீது செல்போன் பறிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. கூச்சலிட்டதால் ரயிலில் இருந்து கீழே தள்ளியவர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: