ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், யுஜிசி, ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சதீப் பந்தோபாத்யாய், ராஷ்ட்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் குமார் ஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, ராஜேஷ்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, தங்க. தமிழ்செல்வன், வைகோ, துரை வைகோ, அருண் கிரிராஜன் மற்றும் டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘ யுஜிசியின் புதிய வரைவு விதிகள் மூலம் மாநிலங்களின் உரிமையை பறிக்கவும், கல்வியை ஆர்எஸ்எஸ் மயமாக்கவும் பாஜ முயல்கிறது. இந்தியாவின் வரலாற்றை அழிப்பதே ஆர்எஸ்எஸ்சின் முக்கிய கொள்கையாகவும், இலக்காகவும் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பை சிதைக்க நரேந்திர மோடி அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. எனவே யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்” என காட்டமாக குற்றச்சாட்டுகள் வலியுறுத்தினார்.
அகிலேஷ் யாதவ்: யுஜிசி புதிய வரைவு அறிக்கைக்கு தமிழ்நாடு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இதற்கு நானும், எங்கள் கட்சியும் முழு ஆதரவு அளிக்கிறோம். இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல்.
தொல்.திருமாவளவன்: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த வரையறைகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன என்றால், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவை ஒரே பரப்பறியும் நடைமுறை என்ற ஆர்எஸ்எஸ்சின்கொள்கை அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. இது ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தில் ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
The post யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி போராட்டம் அரசியலமைப்பை சிதைக்க மோடி அரசு முயற்சி: ராகுல் காந்தி ஆவேச பேச்சு appeared first on Dinakaran.