மதுராந்தகத்தில் சிஐடியு தொழிற்சங்க மாநில குழு கூட்டம்


மதுராந்தகம்: மதுராந்தகத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 4, 5 ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த, கூட்டத்தின் இறுதியில் மாநில தலைவர் ஆ.சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: சாம்சங் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட சிஐடியு சங்கத்தை பலவீனப்படுத்த, தொழிலாளர்களை வெளியேற்றி நிர்வாகம் விரும்புகின்ற நிர்வாகிகளை சங்கத்தின் நிர்வாகிகளாக மாற்ற நிர்வாகத்தினர் முயற்சித்து வருகின்றனர். இதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தொழிலாளர்கள் இடம் மாற்றம் செய்வது, அவர்கள் விரும்பியவர்களை சங்கத்தில் கையொப்பமிட்டால் பரிசுகள் வழங்குவது மற்றும் ரூ3 லட்சம் வட்டி இல்லா கடன் தருவது, பதவி உயர்வு தருவது என ஆசை வார்த்தைகள் காட்டி வருகின்றனர். ஆனால், இதனையும் மீறி தொழிலாளர்கள் சிஐடியு சங்கம் தான் வேண்டும் என தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

அதனால், தற்போது 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சோகாஷ் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், 3 தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். வேலை நீக்கம் செய்வோம் என்று மிரட்டலும் தெரிவிக்கும் நிலை உள்ளது. எனவே, நிர்வாகத்தின் அடக்குமுறையை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.ஆகவே அந்த தொழிலாளர்கள் தங்களை உயரதிகாரிகள் சந்திக்க வேண்டும் என கேட்டுள்ளனர். மேலும் நிரந்தர பணியாளர்களாக உள்ள 93 பேரை வேலை நீக்கம் செய்திடுவோம் என மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடமும் முறையிட்டுள்ளோம். அதேபோல், அரசு இதில் தலையிட்டு நிரந்த தீர்வு காண வேண்டும். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, கடந்த பல ஆண்டுகளாக வருமான வரி சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதன்பேரிலேயே, தற்போது பட்ஜெட்டில் வருமான வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வரிக்கட்டக்கூடியவர்களுக்கு இச்சலுகையில் பயன்பெறுவர். ஆனால், வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத நடுத்தர வர்கத்தை சேர்ந்தவருக்கு எந்த பயனுமில்லை. சத்துணவு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. பெரியாரை பற்றி சீமான் பேசுவது சரியல்ல.பெரியாரின் கொள்கை அறிவிப்புகள் குறித்து தவறாகவும் மற்றும் பாஜவுக்கு ஆதரவாகவும் சீமான் பேசி வருகிறார்.இதுபோன்ற நபர்களுக்கு மக்கள் சரியான பதில் அளிப்பார்கள் என கூறினார். இந்த மாநில குழு கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

The post மதுராந்தகத்தில் சிஐடியு தொழிற்சங்க மாநில குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: