பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: பிப். 11ல் தேரோட்டம்

பழநி: பழநி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூசத்திருவிழா நேற்று காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக விநாயகர் பூஜை, பூர்ணாகுதி போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி – தெய்வானை சமேதரரான முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலின் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி வரப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி – தெய்வானை சமேதரராய் முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 10ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப். 11ம் தேதி நடக்க உள்ளது. அன்று மாலை 4.45 மணிக்கு ரதவீதியில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப். 14ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது.

The post பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: பிப். 11ல் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: