ஸ்டாவஞ்சர்: நார்வேயில் நடக்கவுள்ள செஸ் டோர்னமென்டில், 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜாம்பவான் மேக்னஸ் கார்ல்சனுடன், உலக செஸ் சாம்பியன் குகேஷ் மோதவுள்ளார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் வரும் மே 26ம் தேதி நார்வே செஸ் டோர்னமென்ட் போட்டிகள் துவங்க உள்ளன. உலகின் 6 முன்னணி செஸ் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியனான தமிழகத்தின் குகேஷ், உலக நம்பர் 1 செஸ் வீரரான நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்கள் பேபியானோ கரவுனா, ஹிகாரு நகமுரே, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, சீனாவின் வே யி ஆகியோர் நார்வே செஸ் டோர்னமமென்டில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் சீனாவின் டிங் லிரெனுடன் மோதிய இந்திய வீரர் குகேஷ் கடைசி வரை பரபரப்பாக நடந்த 14 சுற்றுகளின் இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றார். இருப்பினும், உலக செஸ் வீரர்கள் தரவரிசையில் 2,800 புள்ளிகளுக்கும் கீழ் உள்ள வீரராக அவர் உள்ளார். நெதர்லாந்தில் சமீபத்தில் முடிந்த டாடா ஸ்டீல் செஸ் டோர்னமென்டில் சக இந்திய வீரர் பிரக்ஞானந்தாவிடம் கடைசி கட்டத்தில் தோற்று சாம்பியன் பட்டத்தை குகேஷ் கைநழுவ விட்டார்.
மாறாக, உலகின் நம்பர் 1 செஸ் வீரராக கார்ல்சன் இப்போதும் திகழ்வதாக செஸ் நிபுணர்கள் கருதுகின்றனர். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற பின் முதல் முறையாக கார்ல்சனுடன் குகேஷ் கிளாசிக்கல் செஸ் போட்டியில் மோதவுள்ளார். எனவே, இவர்கள் இடையிலான செஸ் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post நார்வே செஸ் டோர்னமென்டில் ஜாம்பவான் கார்ல்சனுடன் சாம்பியன் குகேஷ் மோதல்: மே 26ல் களம் காணும் 6 வீரர்கள் appeared first on Dinakaran.
