ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி சிப்காட் காவல் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்து சிப்காட் காவல் நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள வரவேற்பாளர், பொதுமக்கள் அமரும் இடத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பினர். பெட்ரோல் குண்டுகள் வெடித்து கரும்புகை சூழ்ந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீ பரவாமல் தடுத்தனர். இதே போல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பஜார் வீதியில் உள்ள அரிசிக்கடை மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர்.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை எஸ்.பி. விவேகானந்த சுக்லா சிப்காட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. எனவே அப்பகுதி சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
தனிப்படை போலீசார் திருப்பத்தூர், காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் குற்றவாளியை பிடிக்க சென்னையில் தேடுதல் பணியில் இருந்தனர். அப்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில், சென்னை பல்லாவரம் பகுதியில், ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளியான சிப்காட் பகுதியைச் சேர்ந்த ஹரி(18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து வந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த வாணியன்சத்திரம் காட்டேரி என்ற பகுதியில் ஹரி, இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என்று கூறவே போலீசாரும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை சப்- இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரனின் இடது முழங்கையில் குத்தி கிழித்துவிட்டு ஹரி தப்பி ஓட முயற்சித்து உள்ளான். உடனே இன்ஸ்பெக்டர் சசிகுமார் கை துப்பாக்கியால் ஹரியின் இடது கால் முட்டியில் சுட்டார். இதில் காயமடைந்த ஹரி மற்றும் கத்தியால் கிழித்ததில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் ஆகியோரை வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஹரியை மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹரி மீது ஏற்கனவே பணம் கேட்டு மிரட்டிய வழக்கு நிலுவையில் உள்ளது.
The post ராணிப்பேட்டை அருகே நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு appeared first on Dinakaran.