மாவட்டம் முழுவதும் சோதனை கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை;  4 பேர் மீது வழக்குப் பதிவு  18 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர், பிப். 1: திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட எஸ்.பி.க்கு வரும் ரகசிய தகவலின் பேரில் கடைகளில் திடீர் ஆய்வு செய்து குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதித்து எச்சரித்தும் வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர். அதன்படி நகரின் முக்கிய பகுதியில் உள்ள வடக்குராஜ வீதியில் ஸ்ரீ கணேஷ் டிரேடர்ஸ் மளிகை கடையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கடையில் இருந்த கூல் லிப் 252 பாக்கெட், விமல் 15 பாக்கெட், ஸ்வாகத் 10 பாக்கெட், விமல் சிறிய பாக்கெட் 15, ஹான்ஸ் 700 பாக்கெட் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பூமாராம் (37), தேவராஜ் (56), சீனிவாசன் (48), பெருமாள் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல, புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் பூண்டி, எம்சிஎஸ் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, போலீசாரை கண்டதும் ஒருவர் ஓட்டம் பிடித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 20 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் பூண்டியைச் சேர்ந்த அர்ஜூன் (20) என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 சென்னை அம்பத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பட்டரவாக்கம் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் பின்புறம் உதவி ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக கையில் பையுடன் வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து, அவர்கள் வைத்திருந்த இரண்டு பையையும் சோதனையிட்டனர். அதில், சுமார் 9 கிலோ வீதம் மொத்தம் 18 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தது மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளமை சிவா (29) மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இருளப்பன் (22) என்பதும், கஞ்சாவை ஒடிசா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் பட்டரவாக்கம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மாவட்டம் முழுவதும் சோதனை கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை;  4 பேர் மீது வழக்குப் பதிவு  18 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: