தாராபுரம் : தாராபுரம் அருகே மாணவர்களுக்கான இலவச டியூஷன் மைய கட்டிடத்தை அறக்கட்டளைக்கு மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அலங்கியம் கிராமம் காந்திஜி நகரில் விவசாயத்தை தொழிலாக சார்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களது குடும்பங்களுக்குள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் 4 ஆயிரம் பேரால் ஆண்டுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும் ஊர் நாட்டாமை என்பவர் தலைமை வகித்து காரியங்களை முன்னின்று நடத்துவார். இதன்படி இப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 2 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தில் ஓடுகளால் கூரை வேயப்பட்ட வீடு ஒன்றில் 40 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர இலவச டியூஷன் வகுப்பு நடத்தப்பட்டது.
அவர்கள் உயர் கல்விக்கு செல்ல சமுதாயத்தை சார்ந்த படித்த இளைஞர்களே முன் வந்து மாலை நேர டியூஷன் வகுப்புகளை நடத்தி வந்தனர். கட்டிடம் பழுதடைந்ததால் புதிதாக கட்ட காந்திஜி நகர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்குள் நிதி மற்றும் சிமெண்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களையும் பணம் வசூலித்தும் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டினர்.
இந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி வசூலிக்க நியமிக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த 7 பேர், தற்போது மாலை நேர டியூஷன் வகுப்பு நடத்தும் கட்டிடத்தை பராமரிப்பதற்கும், ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவதற்கும் வசதியாக கட்டிடத்தில் கீழ் பகுதியில் 3 கடைகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும் இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை துவங்க வேண்டும் எனவும் அதற்கான பணிகளை செய்ய வேண்டும் எனவும் கிராம மக்களிடம் கூறியுள்ளனர்.
அறக்கட்டளையின் பெயரில் பட்டா மற்றும் கட்டிட உரிமம் பெற வருவாய்த்துறை அலுவலகங்களுக்கும் விண்ணப்பம் அனுப்ப முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், ஊர் நாட்டாமை பெயரிலேயே அந்த புதிய கட்டிடம் ஊர் பொது இடமாக செயல்பட வேண்டும் என கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300 பேர் நேற்று மதியம் அங்குள்ள கோயில் வாசலில் கூடினர். இது குறித்து தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாராபுரம் தாசில்தாருக்கும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் திரவியம், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் எந்தவிதமான அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
எனவே மேலும் கட்டிட பணிகளை தொடரக்கூடாது என்றும், இருதரப்பு ஊர் மக்களின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் முழுமையான தீர்வு ஏற்பட்ட பின்பே கட்டுமான பணிகளை தொடர வேண்டும் என்றும், இதற்கான அறிவிப்பு நோட்டீசை கட்டிடத்தில் ஒட்ட வேண்டும் என்றும் தாராபுரம் தாசில்தார் திரவியம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
The post தாராபுரம் அருகே பரபரப்பு இலவச டியூஷன் மைய கட்டிடத்தை அறக்கட்டளைக்கு மாற்ற எதிர்ப்பு appeared first on Dinakaran.
